தயரதனை ஈமப்பள்ளி ஏற்றி, பரதனை இறுதிக்கடன் செய்ய அழைத்தல் 2230. | எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும் செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை, வெய்தின் ஏற்றினார்; ‘வீர! நுந்தைபால் பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து’ என்றார். |
(நான்மறைக் கேள்வியார்) எய்தி - (சரயு நதியை) அடைந்து; நூல் உளோர்மொழிந்த யாவையும் செய்து- (ஸ்மிருதி) நூல்களை உடையோர் சொல்லிய விதிகள் எல்லாம்செய்து முடித்து; தீக்கலம் திருத்தி - தீச்சட்டியை ஒழுங்குபடுத்தி; செல்வனை -தயரதனை; வெய்தின் - விரைவாக; ஏற்றினார் - (ஈமப்பள்ளியில்) ஏற்றிவைத்து;(பரதனை நோக்கி) ‘வீர! - வீரனே!; நுந்தைபால் - உன்தந்தையிடத்து; பொய்இல் மாக்கடன்- (நீ செய்ய வேண்டிய ) வேதவழி பிறழாத பெருங்கடமையை; போந்து கழித்தி - வந்து செய்வாயாக;’ என்றார் -. பிறப்பு, இறப்புச் சடங்குகள் பற்றிக் கூறுவன ‘ஸ்மிருதி நூல்கள்’ எனப்படுதலின், அவற்றைஅறிந்தவரையே இங்கு ‘நூலுளோர்’ என்றார் என்க. 129 |