கடன் செய்ய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்துக்கூறல் 2231. | என்னும் வேலையில் எழுந்த வீரனை, ‘அன்னை தீமையால் அரசன் நின்னையும், துன்னு துன்பத்தால், துறந்து போயினான், முன்னரே’ என முனிவன் கூறினான். |
என்னும் வேலையில்- என்று (அவர்கள்) கேட்டுக்கொண்ட சமயத்தில்; எழுந்த வீரனை - கடன் செய்ய எழுந்தபரதனை; முனிவன் - வசிட்ட முனிவன்; (தடுத்து) ‘அரசன் - தயரதன்’ அன்னைதீமையால் - நின் அன்னை செய்த தீமையால்; துன்னு துன்பத்தால்- நெருங்கியதுன்பத்தால்; நின்னையும் - (மகனாகிய) நின்னையும்; முன்னரே - உயிரோடிருந்த அப்போதே; துறந்து - மகன் அல்லன் எனக் கைவிட்டு; போயினான் - இறந்தான்;’ என - என்று (அதனால் நீ உரிமைக்கு ஆகாய் என்று); கூறினான் -. “மன்னே ஆவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று உன்னேன்; முனிவா அவனும் ஆகான்உரிமைக்கு” (1654) எனத் தயரதன் கூறலின் வசிட்டன் இங்குத் தடுத்தான் என்க; அது அவன்மட்டுமேஅறிந்த செய்தி. 130 |