2236.‘துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்;
என்னை! என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா!’

    துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்- நெருங்கிய வளப்பமான
அடிமரத்தை உடைய தென்னையின்; பன்னு வான்குலை - பலராலும்
பாராட்டப் பெறுகின்ற இறந்த குலையில்; பதடி ஆயினேன் -
உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று
காத்த என் அன்னையார்
- என்னைச் சுமந்து பெற்றுவளர்த்த என்
தாயார்;  எனக்கு அழகு செய்தவா - எனக்கு நன்மை செய்தவாறு;
என்னையே - என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?’

     தாழை என்பதற்குத் தென்னை என்பது நேர்பொருள் ‘பதடி’ என்பது
மக்களுக்குப் பயன்படும்பொருள் அற்ற நெல், தேங்காய் முதலியவற்றைக்
குறிக்கும் உள்ளீடு இல்லாத தேங்காயைஊமைக்காய் என்பர்.          135