வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு இறுதிக்கடன் செய்வித்தல்.  

2237.என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்,
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் -
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்.

    நான்மறை நெறி நின்று- நால் வேத வழியில் தான் நிலை பெற்று
நின்று; செய் நீர்மையான் - (அவ்வேதவழியிலே) எல்லாவற்றையும்
(குறையறச்) செய்கின்ற தன்மை உடையவனாகிய வசிட்டன்; என்றுகூறி -;
நொந்து இடரின் மூழ்குறும்
- மனம் வருந்தித் துயரில் மூழ்கியுள்ள;
அத்துன்றுதாரவற்கு - அந்த நெருங்கிய மாலை அணிந்துள்ள பரதனுக்கு;
இளைய தோன்றலால் -பின்பிறத்த தம்பியாகிய சத்துக்கனனால்; அன்று -
அப்பொழுது; நேர் -தயரதனுக்குச் செய்ய வேண்டிய; கடன் - இறுதிச்
சடங்குகளை; அமைவது ஆக்கினான்- பொருந்துவதாகச் செய்து முடித்தான்.

     ‘தாரவன்’ - என்பது அரசகுலத்தான் என்பதால் சொல்லப்பெற்றது.
இங்குத் தார்அணிந்திருந்தான் எனல் வேண்டுவதின்று; துக்கச் செயல்கள்
நிகழ்கிறதாகலின்; அணிந்திருந்ததாரைக் கழற்றி எறிவதும், எறியாமையும்
ஆகிய எவற்றையும் சிந்திக்காத மனநிலை பரதனதுஅப்போதயை நிலை. 136