2239.அங்கி நீரினும் குளிர, அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குற,
சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும்
நங்கைமார்புகும் உலகம் நண்ணினார்.

    அம்புயத் திங்கள் வாள்முகம் திரு விவளங்குற- தாமரையும்,
சந்திரனும் போலும் ஒளிபடைத்த திருமுகம் மேலும் திருமகளின் மலர்ச்சி
பொருந்தியதாக; அங்கி நீரினும் குளிர - (தம் கணவன் மேனியைத்
தழுவியதாகியபாவனையால் தாம் தழுவிய) நெருப்பு நீரைக்காட்டிலும்
குளிர்ந்து தோன்ற; சங்கை தீர்ந்து- மனத்துயர் நீங்கி; தம் கணவர் பின்
செலும் நங்கைமார் புகும் உலகம்
- தம்கணவருடன் இறந்து பின்
செல்லும் கற்புடை மகளிர் எய்தும் நல்லுலகத்தை; நண்ணினார்-இவர்களும்
அடைந்தார்கள்.

     அங்கி குளிர்தல் கற்புடை இவர்களுக்கே; அன்றி நெருப்பின் சுடுதல்
தன்மைமாறியதன்று.                                          138