ஈமக்கடன் முடித்த பரதன் மனை சேர்தல்  

2240.அனைய மா தவன், அரசர் கோமகற்கு
இனைய தன்மையால் இயைவ செய்த பின்,
மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான்.

    அனைய மா தவன்- அப்பபடிப்பட்ட பெரிய தவத்திற் சிறந்தவனாகிய
வசிட்டன்; அரசர் கோமகற்கு -சக்கரவர்த்தியாகிய தயரதனுக்கு; இனைய
தன்மையால்
- (நான்மறை வழியில்சத்துருக்கனன் மூலமாக) இப்படி;
இயைவ செய்தபின் - செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச்செய்து முடித்த
பிறகு; மரபின் வாழ்வினை - அரசகுலத்துக் குரிய அரசச் செல்வத்தை;
வினையின் எய்தும் - (தாய் செய்த ) தீய செயலால் பெற்ற (தனால்
உண்டாகிய); ஓர்பிணியின் வேலையான் - ஒரு நோய்க் கடலில்
கிடக்கின்ற பரதன்; மனையின் எய்தினான்- அரண்மனைக்கண் வந்து
சேர்ந்தான்.

     வசிட்டன் செய்துமுடித்தபிறகு, பரதன் அரண்மனை அடைந்தான்
என முடிக்க. மரபு -பரம்பரை;  இங்கே அரச பரம்பரை - அதற்குரிய
வாழ்வு அரசுச்
செல்வம்-‘வினை’ என்பது நன்மை தீமை இரண்டையும்
குறிக்கும். ஆயினும், தீமையையேபெரும்பாலும் குறித்துநிற்றல் வழக்கு
நோக்கி உணர்க. ‘ஈன்ற தாய்வினை செய்ய அன்றோகொன்றனன்
தவத்தின் மிக்கான்’ என்று (7415) பின்னும் இப்பொருளில் பயின்றுள்ளது
காண்க.                                                139