பத்து நாள்கள் சடங்குகள் நடைபெறல்  

2241.ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என,
மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்;
தந்தை தன்வயின் தருமம் யாவையும்,
முந்தை நூலுளோர் முறையின் முற்றினான்.

     மைந்தன் - பரதன்; ஐந்தும் ஐந்தும் நாள்- பத்து நாள்களும்; ஊழி
ஆம் என - ஒரு யுகக்காலம் போலத் தோன்ற;  வெம் துயர்க் கடலின்
வைகினான்
- கொடியதுன்பக் கடலில் கிடந்து; தந்தை தன்வயின் -
தந்தையிடத்து; தருமம் யாவையும் -செய்யக் வேண்டிய இயல்புகள்
(சடங்குகள்) எல்லாவற்றையும்; முந்தை நூலுளோர் முறையின் -
முன்னோர் கூறிய ஒழுக்க நூல்களிற் கண்டுள்ள முறைப்படியே;
முற்றினான் - செய்து முடித்தான்.

     சத்துருக்கனனைக் கொண்டு செய்து  முடித்தான் என்பது  கருத்து.
தலைமை  பரதன் மேற்றாதலின்மைந்தன் என்றது  பரதனையே குறிக்கும்;
தந்தைக்குரிய கடன்களைச் சத்துருக்கனன் செய்தான்ஆயினும், பரதன்
தானே தன்பொருட்டு ஆற்றவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை
ஆற்றினான்என்றலும் ஒன்று.                                   140