2243. | ‘மன்னர் இன்றியே வையம் வைகல்தான் தொன்மை அன்று’ எனத் துணியும் நெஞ்சினார், அன்ன மா நிலத்து அறிஞர் தம்மொடும், முன்னை மந்திரக் கிழவர் முந்தினார். |
முன்னை மந்திரக் கிழவர்- தொன்மையான் ஆலோசனைக்குரிய அமைச்சர்; அன்ன மாநிலத்து - அந்தக் கோசலநாட்டு; அறிஞர் தம்மொடும் - அறிவுடைப் பெருமக்களோடு; ‘வையம் - இந்த உலகம்; மன்னர் இன்றியே வைகல்தான்- அரசர் இல்லாமல் இருப்பது; தொன்மை அன்று’ -பழமையான (மரபு) நிலை அல்ல; எனத் துணியும் நெஞ்சினார்- என்று உறுதி செய்த மனம்உடையராய்; முந்தினார் - முற்பட்டு வந்து (பரதனைக்) கூடினர். மதி அமைச்சர் அறிஞர்களுடன் பரதனை வந்தடைந்தனர் என்பதும். முன் பாட்டில் வசிட்டன்வருதல் கூறப்பெற்றதாதலின் ஏனையோர் வருகை இப்பாடலில் வந்தது. ‘அரசனில்லாமல் நாடு இருத்தல் மரபன்று’ அது பல தீங்குகள் ஏற்பட வழியாகும் என்றுகருதிக் கூடினர் என்பதாம். வான்மீகம் இவ்விடத்தில்அரசன் இல்லாமையால் நாட்டுக்கு ஏற்படும் தீங்குகளை ஒருசருக்கத்தால் விரிவாகக் கூறியுள்ளது. 142 |