சுமந்திரன் குறிப்பாக முனிவனை நோக்குதல் 2246. | சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான், கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான், முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். |
சுற்றினர் இருந்துழி- (வசிட்ட முனிவனும், மந்திரக் கிழவரும், அறிஞரும்) சூழ இருந்தபோது; கொற்றவர்க்குஉறுபொருள் அரசர்க்குரிய சிறந்த பொருள்களை; குறித்த கொள்கையான் - நன்குஉணர்ந்து நிறைவேற்றம் கொள்கைப் பிடிப்பு உடைய; புலமை உள்ளத்தான் - அறிவால்நிறைந்த மனம் உடைய; சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர்வலான் - பொன்னால்இயன்ற பெரிய தேரைச் செலுத்துதலின் திறன் வாய்ந்த சுமந்திரன் என்னும் பெயருடைய (அமைச்சர்தலை)வன்; முற்று உணர் முனிவனை - எல்லாம் முழுதுணர்ந்த வசிட்ட முனிவனை; முகத்து நோக்கினான் - (தன் மனக்கருத்தை வாயால் உரைக்க வேண்டாது அது தோன்றும்படி) நேரேபார்த்தான். பரதனை அரசு ஏற்கச்செய்யும் தன் கருத்தைக் குறிப்பால் பார்வையால் அறிவித்தான்சுமந்திரனாதல் மேல் பெறப்படும். இவன் அமைச்சர்களுள் தலைவன். முன்னர்த் தயரதன் இராமனைஅரசு ஏற்க அழைத்ததும் (1360) இவன் மூலமே. முடிசூட்டு விழாவிற்கு இராமனை அழைத்ததும்,கைகேயியின் அழைப்பை இராமனுக்கு அறிவித்ததும் (1572-1575). இராமன் காடு செல்லுங்கால்தேர் ஓட்டிச் சென்றதும் இவனாதலும் (1856 -1885) நகர் நீங்கு படலத்துள் வருதலின் இவன் தேர்ஓட்டுதலின் வல்லவன் ஆதல் அறிக; ‘தேர்வலான்’ என்பது (1858) முன்னும் வந்தது. ‘மந்திரிசுமந்திரனை’ (1856) என்பதனால் இவன் அமைச்சனாதலும் அறியப்படும். இவன் தயரதனுக்குத் தேர்ஓட்டியாக இருந்தான் என்பது (1898). முன் கூறப்பெற்றுள்ளது. பண்டைய அரசர்கள்மதியமைச்சர்களுள் தமக்கு மிகவும் அணுக்கமானவர்களைத் தேர் ஒட்டுநர்களாகக் கொள்வர்.‘தேர்வலான்’ என்பது தேர்தலில் வல்லான் - ஆராய்ந்து உறுதிகூற வல்லவன் எனவும் பொருள்பெற்று அமைச்சர்க்கும் பெயராதல் அறிக. 3 |