சுமந்திரன் குறிப்பை முனிவன் உணர்தல்  

2247.நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உண்ர்ந்த மா தவன்,
‘காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்’ எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்;

     சுமந்திரன் -; நோக்கினால் - மனத்தொடு பட்ட பார்வைக்
குறிப்பினால்;  நுவலலுற்றதை - சொல்லியதை; வாக்கினால் அன்றியே -
(அவன்) வாயினாற்சொல்லாமலே;  உணர்ந்த - தெரிந்துகொண்ட;
மா தவன் - பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி -
இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது - இத்தரணி தாங்குதல்; நின்
கடன் ஆம்
- நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக்
குமரனுக்கு
- அரச குமாரனாகிய பரதனுக்கு; அது - அரசின் சிறப்பும்
இன்றியமையாமையும; தெரிய - விளங்கும்படி; கூறுவான்-
எடுத்துரைக்கலானான்.

     ‘நோக்கு’ என்பது வெறும் பார்வையன்று; ‘மனத்தால் நோக்குத’ லாகும்.
இதனை ‘இரண்டன்மருங்கின் நோக்கல் நோக்கம்’ என்னும் தொல்காப்பியச்
சூத்திரத்துக்குச் சேனாவரையர்எழுதிய உரையான் உணர்க். (தொல். சொல்.
வேற். மயங்.) மந்திராலோசனையில் முதற்கண்அமைச்சர் தொடங்கலே
முறை என்பது  இதனால் அறியப்பெறும்.                            4