வசிட்டமுனிவன் பரதனுக்கு அரசின் சிறப்பை உரைத்தல் 2248. | ‘வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள் ஆதியர் நின்வயின் அடைந்த காரியம், நீதியும் தருமமும் நிறுவ; நீ இது, கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால் |
‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே) வனே!; வேதியர் - அந்தனர்; அருந்தவர் - அரியதவம் செய்த முனிவர்; விருத்தர் - (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் - அரசர்கள்; ஆதியர் - முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் - வந்து சேர்ந்த செயல்; நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச நீதியையும்; தருமமும் - (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத் தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ - (அரசன் இல்லாமையால் சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது - இச்செயலை; மனத்துக் கோடி - மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’ அரச நீதியாவது எளியரை வலியர் வாட்டாது பாதுகாத்தலாகும். “மாநிலங்காவலனாவான்மன்னுயிர் காக்கும் காலைத்; தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்; ஊனமிகுபகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால், ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான்அல்லனோ?” என்னும் (பெரிய. திருந. 36) பெரிய புராணச் செய்யுளான் அறிக. அரச தருமம் -குறைவேண்டுவார்க்கு அது நிரப்புதலாம். முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும் அரசன்காட்சிக்கெளியனாய் அது தீர்த்தலையே (குறள் 386. பரி. உரை) நீதியும் தருமமும் எனஇரண்டாகக் கம்பர் வசிட்டன் வாக்கால் கூறினார். 5 |