2249. | ‘தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது, தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால். |
‘ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் - அறம் என்று சொல்லப் படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து - உலகிற்குத் தந்து (மக்கள் அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்; அருமை என்பது - மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது அறிதி - நன்கு அறிவாய்; ஈண்டு - இவ்விடத்தில்; இது - இவ்வறம்; இருமையும் -இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -; இயைவது - பொருந்தியதாகும்; இது -இவ்வறம்; தெருள்மனத்தார் - தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் - செய்யும் செயலாகும். அறத்தின் சிறப்பும்; அது மேலோர்களால் மேற்கொள்ளப்பெற்றது என்பதும் கூறியதாகும்.“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார், பெருமை பிறங்கிற்று உலகு” (குறள்.23) என்பதனைஒப்பு நோக்குக. ‘ஆல்’ அசை. 6 |