2250. | ‘வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம், நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின், உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. |
‘தேர்தரின்- ஆராயும்பொழுது; வள்உறு வயிரவாள் அரசு - வளமை பொருந்திய வன்மையான வாளையுடையஅரசனை; இல்வையகம் - பெறாத உலகம்; நள் உறு கதிர் இலாப் பகலும் - (எல்லோராலும்) விரும்பப்படுகின்ற சூரியன் இல்லாத பகலையும்; நாளொடும் - விண்மீன்களோடும்; தெள்ளுறு மதி இலா இரவும் - தெளிந்த வெண்மையான சந்திரன் இல்லாத இரவையும்; உள்உறைஉயிர் இலா உடலும் - உள்ளே பொருந்திய உயிர் இல்லாத உடலையும்; ஒக்கும் - போலும்.’ வன் - கூர்மை என்றுமாம். சூரியன் அழிக்கும் ஆற்றல், சந்திரன் தண்மையால் காக்கும்ஆற்றல், உயிர் உடலை இயக்கும் ஆற்றல், உயிர் உடலை இயக்கும் ஆற்றல் இம்மூன்றையும் அரசன்உடையனாதலின் அவற்றை இவ்வுவமைகளால் விளக்கினார். பகைவரை அழித்து, நல்லோரைக் காத்து,மக்களை இயங்கச்செய்ய மன்னவன் தேவை. தெறலும், தண்ணளியும் உடையனாய் உல்கை நல்வழியில்இயங்கச் செய்பவன் மன்னன் என்பது இதனால் உணரப்பெறும். மன்னர், மக்கள் - உயிர், உடல்- இக்கருத்தை 177, 1423 ஆம் பாடல்களோடு ஒப்பிடுக. 7 |