2253. | ‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர் ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக் காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால், நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். |
‘பூத்த- (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர்- அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன்முதல புண்ணியர் - பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து -பாராட்டப் பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப்பெற்ற (உன்) முன்னோர்கள்; இன்றுகாறும் - இன்று வரையிலும்; கூ -(இந்தப்) பூமியை; காத்தனர் - (அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது;ஒரு களைகண் இன்மையால் - (நீ அரசன் ஆகாதபடியால்) தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால்; (இவ்வுலகம்) நீத்த நீர்- கடலின்கண்; உடைகல நீரது - உடைந்த கப்பல் தத்தளிப்பதுபோன்றது; ஆகும் -.’ ‘நீத்த’ம் என்பது வெள்ளம் ஆதலின், நீர் நீத்தம் எனவே ‘கடல்’ என்று பொருள்ஆயிற்று. கடலின்கண் உடைந்த கப்பல் தவிப்பதைப்போல அரசன் இல்லாத நாடு அலமரும் என்றதாம்.‘ஆல்’ அசை. 10 |