2254.‘உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான்.

     ‘மைந்த! - பரதனே!; உந்தையோ இறந்தனன் - உன் தந்தையாகிய
தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் - உன் தமயனாகிய இராமனோ
(தந்தை சொற்கேட்டு); நீத்தனன் - (அரசைக்) கைவிட்டுக் கானகம்
புகுந்தான்;  வந்ததும் - (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்;
அன்னை தன் வரத்தில்
- உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்;
நீ அந்தம் இல் பேரரசு அளித்தி - நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத்
தரசை ஏற்று நடத்துக; அன்னது - (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச்
சிந்தனை
- எங்களுக்கு எண்ணம்;’ என - என்று; தெரிந்து  கூறினான் -
ஆராய்ந்து சொன்னான்.

     மரபு வழித் தொன்றுதொட்டு வந்த அரசு என்பான், ‘அந்தம் இல்
பேரரசு’ என்றான் எனினும்அமையும்.                              11