2256. | நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும் இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்; ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர, தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்; |
(பரதன்), நடுங்கினன் - (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி; நாத்தடுமாறி - (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் - கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று; மகளிரின் - பெண்களைப் போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர - (பின்னர்) மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு; உள்ளம் - தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் - சொல்லத் தொடங்கினான். துக்கம் வந்தவுடன் அறிவழிந்து புலம்பல் மகளிர் இயல்பு - “பெட்டைப் புலம்பல்பிறர்க்குத் துணையாமோ’ (பாஞ்சாலி சபதம் 62.22.) என்ற பாரதி பாடல் காண்க. 13 |