2266. | அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி கவிக்கும்’ என்று உரைக்கவே, களித்ததால் - அது செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்? |
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய்- ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக; புவித்தலை உள உயிர் எலாம் -உலகத்திடத்து உள்ள உயிர்கள் எல்லாம்; ‘இராமன் பொன்முடி கவிக்கும்’ - இராமன்பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று உரைக்கவே என்று (முரசொலி மூலம்சத்துருக்கனன்) சொல்லவே; களித்தது - பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது - அந்தச் சொல்; செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொல் - செவி யென்னும் பொறி,கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ? உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனைசெய்தது தற்குறி்ப்பேற்ற வணியாகும். பொறிகளை அவித்தவர் என்பதற்குப் புலன்களைஅவித்தவர் என்பது இலக்கணை. பொறிகளின்வழி புலநுகர்ச்சிக்கு மனத்தைச் செல்லவிடாதுஅடக்கியவர்கள் என்பது கருத்து. ‘உயிர் எலாம்......களித்தது’ என்பது ஒருமை பன்மை மயக்கம்; தொகுதி ஒருமை என்றும் கொள்ளலாம். ஆல், ஆம் - அசைகள். கொல் -வினாப்பொருட்டு. 23 |