2267.படு முரசு அறைந்தனர், ‘பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக’ என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே!

    ‘பரதன் - ;  தம் முனை- தன் அண்ணனாகிய இராமனை;  கொடி
நகர் - கொடிகள் கட்டப்பெற்றுள்ள அயோத்தி மாநகர்க்கு;தரும் -
அழைத்துவரப் போகிறான்; அவன் கொணர - அந்த இராமனை
அழைத்துவர; சேனையும் முடுகுக’ - சேனைகளும் புறப்படுவதற்கு
விரைவாக; என்ற படுமுரசு அறைந்தனர் சொல்- என்றிவ்வாறு ஒலிக்கும்
முரசினை அடித்தவர்கள் கூறிய சொல்லானது; மூரி மா நகர் -பெருமையும்
சிறப்பும்  உடைய அயோத்தி நகரமாகிய;  வேலையின் - சமுத்திரத்திலே;
உடுபதி - விண்மீன்களுக்குத் தலைவனாகிய சந்திரனின்; உதயம்
போன்றது
-தோற்றம் போன்றது.

     மூரிமாநகர் என்றது  நகரமக்களைக் குறித்தது. முழுநிலவின் உதயம்
கண்ட கடல் பொங்கிஆர்ப்பரிப்பது போல அயோத்தி நகர மக்கள்
மகிழ்ச்சியால் ஆரவாரித்தார்கள் என்பதாம்.மேற்பாட்டில் தனித்தனி
ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியடைந்தமையை விளக்கச் ‘செவியுள்நுழைந்த
தெய்வத்தேன்’ என்றார். இங்கு எல்லாரும் சேர்ந்து அடைந்த மகிழ்ச்சி
ஆரவாரத்தைக் “கடலின்கண் சந்திர உதயம்” என்று உவமைப்படுத்தினார்.
‘ஏ’ காரம்ஈற்றசை.                                             24