2268. | எழுந்தது பெரும் படை - ஏழு வேலையின், மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ, அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க் கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. |
பெரும் படை - பெரிய (அந்தச்) சேனை; மொழிந்த பேர் ஊழியின் -(எல்லோராலும்) பேசப்படுகின்ற உலக இறுதிக் காலத்தில்; ஏழு வேலையின் - ஏழுகடல்களும் பொங்கி எழுந்தது போல; முழங்கி - பேரொலி செய்து; முந்து எழ -முற்பட்டுப் புறப்பட; (அதனால்) கேகயன் மடந்தை ஆசை - கைகேயியின் (தன் மகன்அரசாள வேண்டும் என்னும்) ஆசை; அழிந்தது - கெட்டழிந்தது; பானது உள் நின்றுசெலுத்திவிட; துயர் - (இராமனைப் பிரிந்ததனாலும், பிரித்ததனாலும்) உண்டாகியதுன்பம்; போய்க் கழிந்தது - மிகவும் அதிகமாகியது. ஊழிக் காலத்துக்கடல்களின் ஆரவாரத்தில் அழிவன பல; அதுபோல் சேனைகள் செய்தபேராரவாரத்தில் கைகேயியின் ஆசை போன திசை தெரியவில்லை காதல்பெருக்கின் மிகுதியால் எழுந்த ஆரவாரத்தால் அவளும் மனம் மாறினாள் என்று கூறுவாரும் உளர். அவ்வாறாயின், துயர் என்பது ஈண்டு இவ்வளுவு துன்பங்களுக்குக் காரணம் ஆனோமே என்பதனால் ஏற்பட்ட கழிவிரக்கம் ஆகும். யுகாந்த காலத்தில் ஏழு கடல்களும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கி எழும் என்பராதலின்அப்போதைய பேரொலி போன்றது சேனைகளின் புறப்பாட்டினால் உண்டாகிய ஒலி என்றுஉவமையாயிற்று. ‘போய்க் கழிந்தது துயர்’ என்பதற்குக் கைகேயியின் துயர் போய்க் கழிந்தது என்பாரும்உளர். வான்மீகத்தில் இப்படி ஒரு கருத்து உண்டு. ‘ஏ’ காரம் ஈற்றசை. 25 |