சேனைகளின் எழுச்சி 2269. | பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும், மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள், கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே |
பண்ணின - அலங்கரிக்கப்பெற்றனவாகிய; புரவி, தேர், பகடு, பண்டியும்- குதிரை, தேர், யானை, வண்டி ஆகியவை; மண்ணினை மறைத்தன - (வெற்றிடம்இல்லாமல் பரந்திருத்தலின்) மண்ணை மறைத்துவிட்டன; மலிந்த மாக் கொடி -(சேனைகளில் அங்கங்கே) நிரம்பியுள்ள பெரிய கொடிகள்; விண்ணினை மறைத்தன - (ஆகாயம்எங்கும் கட்புலன் ஆகாதபடி பரந்திருத்தலின்) ஆகாயத்தை மறைத்து விட்டன; விரிந்த மாத்துகள் - சேனைகள் செல்வதால் மேல் எழுந்து விரிந்த பெரிய புழுதித் துகள்கள்; கமலத்தோனை - (சத்திய லோகத்தில் உள்ள) பிரமதேவனது; கண்ணினை மறைத்தன -கண்களை மறைத்துவிட்டன. சேனைகளின் மிகுதி கூறியவாறாகும். பண்டியும் என்ற உம்மையை, புரவி, தேர், பகடு,என்பனவற்றோடும் பிரித்துக் கூட்டுக. ‘கமலத்தோனைக் கண்ணினை மறைத்தன’ என்பதனுள் இரண்டன்பாலும் வந்துள்ள ஐயுருபினை, ‘கமலத்தோனது கண்ணினை’ என்றேனும், ‘கமலத்தோனைக் கண்ணின்கண்’என்றேனும் திரித்துப் பொருள் கொள்க. வேற்றுமைப் பொருள் மயக்கம் என்பர் இலக்கணநூலார்.“முதற்சினைக் கிளவிக்கு ‘அது வென் வேற்றுமை, முதற்கண் வரினே சினைக்கு ஐவருமே’, “முதல் முன்‘ஐ’ வரின், ‘கண்’ என்வேற்றுமை, சினைமுன் வருதல் தெள்ளிது என்ப” என்னும் (தொல். சொல்.வேற். மயங். 4, 5.) நூற்பாக்களைக் காண்க. இதனுள் ஏதேனும் ஒன்றில் சிறப்பும்மைதொக்கதாகவும் கொள்க. ‘ஏ’ ஈற்றசை. 26 |