2272.சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமா ரொடும் -
ஏற்று இளம் பிடிக்குலம் - இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே.

     சேற்று இள மரை மலர் - சேற்றின்கண் தோன்றுவன ஆகிய
இளமையான தாமரை மலர்; சிறந்தவாம் என - எம்மைக் காட்டிலும்
சிறந்தனவோ;  என - என்று கேட்பது போல;  கால்தளம் - பாதமாகிய
மலரிதழ்;  பொலிதரு - விளங்குகின்ற; கன்னிமாரொடும் - இளம்
பெண்களுடனே; இளம் பிடிக்குலம் - இளைய பெண்யானைக்கூட்டம்;
இன் நடை இகலி - இனிய நடையால் பகைத்து; ஏற்று - (எதிர்) ஏற்று;
தோற்று - நடை அழகில் அவர்கள் விஞ்சியபடியால்) தோல்வியடைந்து;
(அதற்குத்தண்டனையாக) இள மகளிரைச் சுமப்ப போன்ற -
இளம்பெண்களை (இப்போது) சுமந்து  திரிவனபோன்றன.

     வென்றோரைத் தோற்றோர் சுமத்தல் இயல்பாதலின், இங்ஙனம்
கற்பனை செய்தார்நடையழகில் மோதிப் பார்த்துத் தோல்வியடைந்த பெண்
யானைகள் மகளிரைச் சுமத்தல்போலஉள்ளது இச் சேனைகளின் இடையே
இளம் பெண்கள் பிடிகளில் ஏறிச் செல்லும் காட்சி என்றுதற்குறிப்பேற்றம்
செய்தார். ‘எம்மினும் தாமரை மலர் சிறந்தனவோ’ என எள்ளி நகையாடுவது
போலக் கால்தளம் பொலிகின்ற கன்னியர் என்பதும் தற்குறிப்பேற்ற வணி,
மரைமலர் என்பதுமுதற்குறை. ‘ஏ’ ஈற்றசை.                         29