2273. | வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச் சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன; கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா மாதரி்ன் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. |
வேதனை- வருத்தத்தைத் தரும்; வெயிற்கதிர் தணிக்க- சூரியனால் ஆகியவெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும் சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவிநின்று) மென்மழைச் சீதநீர் தொடு - மெல்லிய மேகங்களது குளிர்ச்சி பொருந்தியநீரைத் தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து); சென்றன- (சேனைகளின் இடையே) சென்றன வாகிய; வரம்பு இல் கோடி - கணக்கற்றகோடியளவான; நெடுங்கொடியும் -நீண்ட கொடிகளும்; கோதை- கையுறை அணிந்த; வெஞ்சிலையவன் - கொடிய(கோதண்டம் எனப்பெறும்)வில்லை ஏந்திய இராமனது; கோலம் - பட்டாபிடேகக் கோலத்தை; காண்கிலா- காணப்பெறாத; மாதரின் -பெண்கள் போல; நுடங்குவ- அசைகின்றனவாயின. கொடிகள் வானளாவி மேகத்தைத் தொடுவதும், அசைவதும் சேனைகளின் வெயில் வெம்மை தணிக்கமேகத்தின் குளிர்நீர் தெளிப்பதாகவும், இராமன் முடிசூடும் கோலம் காணாத மகளிர் என அசைவதாகவும் கற்பனை செய்யப்பெற்றன. தற்குறிப்பேற்றவணி, உவமையணி என முறையே காண்க. கோதை- கையுறை. விற்போர் செய்வார் கைகளுக்குத் தோலாற் செய்த உறை அணிவர். ‘ஏ’ காரம்ஈற்றசை. 30 |