2274. | வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென, அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய், மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென, எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். |
எண்ண அரு மன்னவர் - கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல் வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் - அளவுபடாத பல வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல - தன்மேலே வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து - (தான்) மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து - பூமியில் இறங்கி; ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல; களிற்றின் ஏகினார் - (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள். பலவடிவு கொண்ட சூரியன் பல மன்னர்களுக்கும், மேல் செல்லும் வெண்மதி மன்னர்மேல்நிழற்றிய வெண்குடைக்கும், மேகம் ஏற்றிச் செல்லும் யானைக்கும் உவமையாயின, சூரியன்மண்ணில் இறங்கல் இல்லையாதலின் இது அற்புதஉவமையணியாகும். 31 |