2275.தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே.

     ஓர்பரவை - (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்;  தேர்மிசைச்
சென்றது 
-தேர்மேல் சென்றது; ஓர் உவரி- (யானை வீரர்களாகிய) ஒரு
சமுத்திரம்;  செம்முகக் கார் மிசைக் சென்றது- சிவந்த (புள்ளிகளை
உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது;
கார்க்கடல் - கரிய (குதிரை வீரர்களாகிய)கடல்; ஏர்முகப் பரிமிசை
ஏகிற்று -
அழகிய முகத்தை உடைய குதிரைகளின்
மேல்சென்றது; 
பதாதிப் பௌவம்
- காலாட் படை வீரர்களாகிய கடல்; பார்மிசை
எங்கணும் படர்ந்தது -
மண்ணில் மேல் எல்லா இடங்களிலும்
படர்ந்து  சென்றது.

     வானத்திலிருந்து பூமிவரை நோக்குவார்க்கு, மேலே தேர் வீரர்
கடலும், அடுத்து யானை வீரர் கடலும், அதன்கீழ்க் குதிரை வீரர் கடலும்,
மண்ணில் காலாள் வீரர் கடலும் எனநாற்பெருங்கடல்கள் படிப்படியாய்த்
தோன்றின என்பதாம் - சேனையின் மிகுதி கூறியவாறு. உருவகஉயர்வு
நவிற்சி அணி. ‘ஏ’ காரம் ஈற்றசை.                                32