2277.தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.

     தேவரும்மருள்கொளத் தெரியும் காட்சியர் - தேவர்களும்
திகைக்கும் ஒளிர்கின்றதோற்றமுடைய; மகளிர் -பெண்கள்; தா அரு-
குற்றம் அற்ற; நாண் முதல்-நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனப்பெறும்;

அணிஅலால் - அணிகலன்கள் அல்லாமல்; தகை மேவரு- அழகு
பொருந்திய(பொன்னாலும் மணியாலும் புனைந்த);  கலன்களை-
அணிகளை;  வெறுத்த மேனியர் -வேண்டாம்என்று நீக்கிய உடம்போடு;
பூ உதிர் கொம்பு என - பூக்களை உதிர்த்துவிட்டபூங்கொம்பு போல;
போயினார் - (அக்கூடத்தில்) சென்றார்கள்.

     அரசர்க்கு வந்த துன்பம் தமக்கென நினையும் மக்கள் ஆதலின் அணி
அணியாமல் சென்றனர்என்க. “நவை அறு குணங்கள் என்னும் பூண்” எனப்
பின்னும் (7653) அணிகலன் என்பார் குணங்களை. “ஏண்பால் ஓவா நாண்
மடம் அச்சம் இவையே தம்,  பூண் பாலாகக் காண்பவர் நல்லோர்” (1533)
என முன்னும் கூறியது காண்க. “பூ உதிர் கொம்பு ‘உவமையணி. அணிகலன்
நீத்த கைகேயியை, ”பூஉதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவிமிசைப்
புரண்டாள்” (1493.) என்றார்முன்னும்.                             34