2279.செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர்
மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.?

     செல்லியசெலவினால் - பரந்து செல்கின்ற செல்கையால்;
‘திக்குசிறிய’-திசைகள் இடம் போதாமல் சிறியன;  எனச் சொல்லிய
சேனையை
- என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச்
சேனையை; சுமந்தது  எனில் - (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது
என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை- ஒல்லென்றுஒலிக்கின்ற
கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்-
மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்;  மெலியர்
கொல்
- மெலியர்போலும்.

     ‘பூதேவி - நிலமகள்’  என்று  சொல்லும் வழக்குப் பற்றியது. “நிலம்
என்னும் நல்லாள்”என்றார் (குறள்.1040.) வள்ளுவரும். மெல்லியல்
பெருஞ்சுமையைத் தாங்க மாட்டாள் ஆதலின்,பூமியை மெல்லியல் என்றல்
பொருந்தாது என்று சமத்காரமாகக் கூறிச் சேனையின் மிகுதியைப்
புலப்படுத்தினார். ‘ஏ’ காரங்கள் அசை. ‘கொல்’ ஐயப்பொருட்டு.         36