2281.இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன - குலவுத் தோள்களே.

     குலவுத்தோள்கள் - (ஆண்களின்) திரண்ட தோள்கள்;  இன்
துணைவர்
-(அவர்களுடைய) இனிய மனைவியரது;  முலைஎழுது
சாந்தினும் -
முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்;  மன்றல்
அம் தாரினும் -
(தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்;
மறைந்திலாமையால் - இப்பொழுது  மறையாமல்(இயற்கையாக
உள்ளபடி) விளங்கித்தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் -
நெருங்கிய இளைய கொடிமுதலாகிய;  தூறு நீங்கிய- புதர்கள் இல்லாமற்
போன;  குன்று என - மலைபோல;பொலிந்தன- தோன்றின.

     மகளிர் கோலம் செய்யாமை போல ஆடவரும் உள்ளனர் என்பதாம்.
இன்துணையவர் என்றது காதலியராகிய மனைவியரை. ‘ஏ’ ஈற்றசை.      38