இலக்குவன் சொன்ன செய்தி 1881. | ‘உரைசெய்து எம் கோமகற்கு உறுதி ஆக்கிய தரைகெழு செல்வத்தைத் தவிர, மற்று ஒரு விரை செறி குழலிமாட்டு அளித்த மெய்யனை அரைசன் என்று இன்னம் ஒன்று அறையற் பாலதோ? |
‘எம் கோமற்கு - எம் தலைவனாகிய இராமனுக்கு; உரை செய்து - இவ்வரசுஉனக்கு உரியது என்று சொல்லி; உறுதி ஆக்கிய - அரசவையில் பலர் முன்னிலையில் உறுதிப்படுத்திய; தரை கெழு செல்வத்தை - கோசல நாட்டொடு பொருந்திய அரசாட்சிச்செல்வத்தை; தவிர - இராமன் ஆளாமல் தவிரும்படி; மற்று ஒரு - வேறாகிய ஒரு; விரை செறி குழலி மாட்டு - மணம் பொருந்திய கூத்தலை உடைய கைகேயியிடம்; அளி்த்த - கொடுத்துவிட்ட; மெய்யனை - சத்திய வாக்கினனாய தயரதனை; அரைசன் என்று - அரசன் என்று; இன்னமும் அறையற்பாலதோ?’ - இனியும் சொல்லுதல் தகுதியுடையது ஆகுமோ.’ அரசவையில் உறுதிசெய்ததை அந்தப்புரத்தில் மாற்றியவன் சத்திய சந்தனா, அரசனாஎன்று வெகுட்சியாகக் கேட்கிறான் இலக்குவன், ‘மெய்யனை’ என்பது இகழ்ந்துரைத்த வார்த்தை.‘அவன் அரசனாதற்குத் தகுதியுடையவன் அல்லன்; அவனுக்கென்ன நான் செய்தி சொல்லியனுப்புவது’ என்கின்ற சினவெறுப்புப் புலனாதல் காண்க. 42 |