2283. | விரி மணி மேகலை விரவி ஆர்க்கில தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி, அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. |
தெரிவையர் அல்குல் - மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல் தேர் என -மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி விரி மேகலை விரவி ஆர்க்கில- மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி - பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்ன - வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை மலர் போல; பரிபுரம் ஆர்க்கில - சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன. இரண்டும் உவமையணி. ‘ஏ’ காரம் ஈற்றசை. 40 |