2286.மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே.

     அவண் எழுந்த சேனை - அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும்,  வயங்கு திக்கையும் - பூமி,
ஆகாயம்,  திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல்
- உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் -
ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் -
(படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது -
(படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.

     ‘உண்ணிய’ ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்;  ‘நிமிர்’
என்னும்வினைகொண்டு முடிந்தது.  ‘ஏ’ காரம் ஈற்றசை.               43