2288.அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர்.

     அவ் அயோத்தி மாநகர் - அந்த அயோத்தி மா நகரமானது;
அறிஞரும்,சிறியரும் ஆதி அந்தமா - அறிவானமைந்த பெரியோர்
முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் -
நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் -செல்வமகளும்; நீங்கலால் -
நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால்; குறியவன் - அகத்திய
முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் - (தன்)நீரை
யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது- அலைவீசும்
கடல்வறிதானாற் போன்றது.

     வெறுமை அடைந்த அயோத்திக்கு அகத்தியர் உண்ட கடல்
உவமையாயிற்று. ”அறந்துறந்து ஈட்டுவார்தம் அருள்பெற்ற செல்வம்
போல, வறந்தன படுநீர்ப் பௌவம்” என்பதனால் (திருவிளை. மதுரைக்.
இந்திரன்பழி. 54) அகத்தியர் உண்ட கடலின் இயல்பினை அறிக. இறுகாறும்
சேனைஎன்று கூறினாரேனும்,  அயோத்தி நகர ஆடவர் மகளிர்
அனைவரையும்  உள்ளடக்கியே அவ்வாறு கூறிச் செல்கின்றார்
என்பதைக் கவிப் போக்கால் காணலாம்.                           45