2289. பெருந் திரை நதிகளம், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருந்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ.

     அப்படை செல் ஆறு - அந்தப் படைகள் செல்கின்ற வழி;
பெருந்திரை நதிகளும்- பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -;
பெட்புறு -
விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -;
மண்ணும் -; கண்ணுற -
பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்);
அயோத்தி ஆம் தெய்வ மா நகர் - அயோத்தியாகிய தெய்வத் தன்மை
வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது -
திருத்தமற்ற அரியதெருவைப் போன்றது.

     படைகள் செல்கிற வழியில் நதி,  வயல், மரம், மலை, மண்
காணப்படுவதால் ‘திருந்தல்இல் தெரு’ என்று  உவமைப்படுத்தினர்.
படைகள் வீதியில் செய்வது வழக்கமாதலின் படைகள்செல்கின்ற இடத்தை
வீதி போன்றது என்றார். மேற்செய்யுளில் அயோத்திநகர் வெறுமையானதைக்
காட்டியது. இது  படைசெல்லும் இடம் அயோத்தி நகரத் தெருப் போல
மக்கள் கூட்டம் நிரம்பிவழிவதாயிற்று என்கிறது. ‘அரோ’ அசை.       46