2291. | ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல், தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் - வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. |
ஆள்உலாம் கடலினும் - மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற் கிடனாக உள்ளகடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல்- விரிந்து பரந்துள்ள அச்சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் -ஒளி பரந்த நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது -(மின்னல் போன்ற) இடையே அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல்அணி - தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்ததுஇல்லை - நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை. பெண்கள் இடைமின்னல் ஒளி அன்றி, வேறு அணிகளின் மின்னொளி இல்லை என்றபடி. கேழ் -நிறம்; எதுகை நோக்கிக் கேள் என நின்றது. ‘கெழு’ என்னும் உரிச்சொல் ‘கேழ்’ எனநின்றது. “குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே” (தொல். - சொல். உரி. 5) என்பது காண்க.அக்கடல் என்றது சேனையை; உருவகம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 48 |