2293.ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை.
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது -
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே.

     கண்ணன்- கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய
இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண - காட்டின்கண்வசிக்கும்
வாழ்க்கையை மேற்கொள்ள,  (அச்செயல்); ஆடவர்க்கு- ஆண்களுக்கு
எல்லாம்; ஏடு அறு கோதையர் - புறவிதழ்நீக்கிய மலர் கொண்டு
தொடுத்த மாலை அணிந்த மகிளிர்;  விழியின் எய்த கோல்-
கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது;  உரம் ஊடு உறத்
தொளைத்து
உயிர்உணா வகை-மார்பினை ஊடுருவிச் சென்று
அவர்கள் உயிரைப் போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது-அரிய
பெரிய கவசம் அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.

     இராமன் வனம் போய துயரால், பெண்டிரும் காதற் பார்வை
இழந்தனர், ஆடவரும்அப்பார்வையால் துன்புறுதல் இலர் என்று
இருவர்க்குமே  இதனைக் கொள்க. ‘ஏ’ காரம்ஈற்றசை.                50