2294.கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் -
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே?

     அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் - மன்
மதனது (பிறரை வருத்தும்)ஐந்து  கொடிய கணையால் நெருக்கப்படும்
ஆண்களது  மணம;  மகளிர் கொங்கை - பெண்களது முலைகளில்;
கிடந்து உண்கில - இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை
கேகய மகளின் கண்ணிய சினம் -
கனமான காதணி அணிந்த
கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்;  கிடந்து - பெண்கள் இடத்தே
தங்கி;  எரிதலின் - எரிகின்றகாரணத்தால்;  தீர்ந்தவே கொல் -
(கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ?

     கைகேயி ஒருத்தியால் எல்லா மகளிரையும் தயரதன் வெறுத்தான்
என்பதனை முன்னர்க் (1516) கூறினார்.  கைகேயிமேல் உண்டாகிய நெருப்பு
அனைத்து மகளிரிடத்திலும் தங்கியிருப்பதாகக் கருதி ஐங்கணை அடரவும்
ஆடவர் கொங்கையை அநுபவியாது விட்டனர். ஐங்கணை - மலர் அம்பு
ஐந்து,  தாமரை,  முல்லை,  மா,  அசோகு, நீலோற்பலம்ஆகிய  ஐந்து
மலர்களும் மன்மதன் அம்புகளாகும். “கொல்” ஐயம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 51