சத்துருக்கனன் கூனியைத் துன்புறுத்தப் பற்றவே, பரதன் விலக்கல்  

2297.மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;

     இளவல் - நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்;  வழிச்
செல்வாரொடும் -
(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு - மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி - விரைந்து சென்று; ஆர்த்து - பேரொலிசெய்து;
அழன்று - கோபித்து;  அந்தரத்து எற்றுவான் - ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி - (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் - (தம்பிக்குச்) சொல்லலானான்.

     தயரதன் உயிர் போதற்கு மூலகாரணம் மந்தரை ஆதலின், ‘மந்தரைக்
கூற்றம்’ என்றார். நம்செயல் தடைபட்டுவிடுமோ; இனி நடப்பன காண்போம்
என்னும் ஆசையால் மந்தரை உடன் செல்லவிரைந்தாள் என்க. கண்டு,
ஓடி, ஆர்த்து, எற்றுவான் பற்றலும் எனமுடிக்க.                     54