2299. | ‘ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும், கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்! போதும் நாம்’ என்று கொண்டு, அரிதின் போயினான். |
‘கோதுஇலா அருமறை குலவும் நூல்வலாய்! - குற்றம் இல்லாத அரிய மறை பொருள்களைத்தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில் தேர்ச்சி பெற்றவனே!; அந்தம் இல் வேதனைக் கூனியை-முடிவில்லாத வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை; வெகுண்டும் என்னினும்-மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்; ஐயன் முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்; என்று - என்று கருதி; நாம்போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்; என்று அரிதின் கொண்டு - என்று சொல்லிச்சிரமப்பட்டு(அவனைத் தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான்- சென்றான். வெகுண்டும் - கோபித்தோம்; தன்மைப் பன்மை வினைமுற்று. வேதம் வல்ல நீ ஓர்அடிச்சியின் பொருட்டுச் சினம் கோடல் தகுதி அன்று என்று குறிப்பித்தானாம்; என்றது பரதன்தாயைச் சீறாது விட்டதற்கு மேற்குறித்த காரணத்தைச் சுட்டியது எனலும் ஆம். 56 |