பரதன் கங்கைக் கரை அடைதல் கலிவிருத்தம் 2303. | பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான், காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ, தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான். |
பூவிரி- பூத் தொழிலாற் சிறப்புற்ற; பொலன்கழல் -பொன்னாற் செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த; பொருஇல் தானையான்- ஒப்பற்ற சேனையை உடையபரதன்; காவிரி நாடு அன்ன- காவிரி நதியால் வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த; கழனிநாடு ஒரீஇ- வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு நீங்கி; தாவரசங்கமம் என்னும் தன்மையயாவையும் - நிலைத்திணை; இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்; இரங்கிட- (தன் நிலை கண்டு) வருந்த; கங்கை எய்தினான் -கங்கைக்கரையை அடைந்தான். பூ - பொலிவு என்றும் ஆம். அரசகுமாரன் மரவுரி தரித்துத்துயரக் கோலத்தோடு வருதல் கண்டு மனம் தாளாமல் எல்லா உயிர்களும் இரங்கின. ஏழு வகையானஉயிர் வர்க்கங்களைத் தாவரம், சங்கமம் என்ற இரண்டில் அடக்கினார். ஒரே இடத்தில்நிலையாக இருப்பன நிலைத்திணையாகிய மரம், செடி முதலிய தாவரங்களாம். இடம் விட்டுப்பெயர்ந்து செல்லும் தன்மை படைத்த ஊர்வன. நீர் வாழ்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் முதலியவை இயங்கு திணையாகிய சங்கமம் ஆகும். கம்பர் தம்முடைய நாடாகிய சோழநாட்டைக் கோசல நாட்டுக்கு உவமையாக்கினார். உவமைபொருளினும்உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது இலக்கணம். “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை”(தொல். பொருள். உவம. 3) என்பதனால் இங்குக் கோசல நாட்டினும் சோழ நாடு உயர்ந்தது என்றாயிற்று இங்ஙனம் தம் நாட்டை மீக்கூறியது கம்பரது தாய்நாட்டுப் பற்றைக் காட்டும். சோழநாடு போலவே கோசல நாட்டிலும் பயிரில்லாத வெற்றிடம் இல்லை என்பதாம். |