சேனையின் எண்ணிக்கை  

2307.கான்தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன -
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே.

     கான் தலை நண்ணிய - காட்டிடத்திற் சென்ற;  காளை பின்படர் -
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற;  தோன்றலை - இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை - பரதனை;  அவ்வழி -
அந்த வழியிலே;  தொடர்ந்து சென்றன - பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர்  உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்ற;  மூன்று பத்து ஆயிரத்து  இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் - அக் குரோணிகள் ஆகும்.

     அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க. மகாசக்கரவர்த்திகளுக்கு எல்லாம்அறுபதினாயிரம் என்றல்
நூல் மரபு என்பர் அக்குரோணி - அகௌஹிணீ என்னும் வடிசொற்
சிதைவு என்பர். ‘ஏ’ ஈற்றசை.                                     5