பரதன் சேனையுடன் வருதல் கண்டு குகன் ஐயுற்றுச் சீற்றமுறுதல் 2308. | அப் படை கங்கையை அடைந்த ஆயிடை, ‘துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம் இப் படை எடுத்தது?’ என்று, எடுத்த சீற்றத்தான். |
அப்படை- அந்தச் சேனை; கங்கையை அடைந்த ஆயிடை - கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது- இந்தச் சேனை புறப்பட்டது; துப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை- பவளம் உடைய கடலிலிருந்து நீரை முகந்து சூல் கொண்ட கரு மேகத்தை; ஒப்பு உடை அண்ணலோடு - உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய இராமபிரானோடு; உடற்றவேகொல் - பேர்செய்வதற்காகவேயோ; என்று - எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்-மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து தோன்றினான் (2313.) பரதன் சேனையோடு வடகரை அடைந்தான். குகன் தென்கரையில் தோன்றினான். பரதனையும்சேனையையும் கண்டு ஐயப்பட்டுச் சீறுகிறான். அடுத்த செய்யுளின் முதற்கண் ‘குகன் எனப் பெயரியகூற்றின் ஆற்றலான்’ என்பதனை இங்குக் கொண்டு பொருள் முடிக்க. இதுமுதல் ஆறு பாடல்கள் தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப் பதினொராம்பாடலில் முடியும். ‘ஏ’ வினா? ‘கொல்’- ஐயம். ‘ஆம்’அசை 6 |