2309. | குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான் தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் - நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில் புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான். |
குகன் எனப் பெயரிய - குகன் என்ற பெயரை உடைய; கூற்றின் ஆற்றலான் - யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்; தொகை முரண் சேனையை - கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்) சேனையை; துகளின் நோக்குவான் - ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்; நகை மிக - (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற - கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற - (உள்ளே எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் - (கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவப் போர்விலான் - புருவமாகிய போர்க்குரிய வில்லை உடையனானான். மேல் பாட்டில் ‘எடுத்த சீற்றத்தான்’ என்றார். குகனுக்கு வந்த சீற்றத்தின்மெய்ப்பாடுகளை இங்கே கூறினார். சேனை வருவதை முன்னவர் வந்த ‘துகளினால்’ பார்த்தறிந்தான்என்றலும் ஒன்று. ‘புருவப் போர்வில்’ என்றது உருவகம். புருவத்துக்கு வில் உவமை. வளைதல்தன்மையால்; போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம் மேலேறி மேலும்வளைந்தது. அதனால், ‘போர்விலான்’ என்றார். இனி அவன் சீற்றம் தொடர்வதைத்தொடர்ந்து கூறுகிறார். 7 |