2312. | ‘எலி எலாம் இப் படை; அரவம், யான்’ என, ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் - வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே. |
‘இப்படை எலாம் எலி - இந்தச் (பரதன்) சேனை முழுவதும் எலிகளாகும்; யான்அரவம் - யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும் பாம்பாவேன்;’ என - என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் - வலிமை நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி எலாம் - வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை; உவந்து கூவினான் - மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி). ‘இப்படை’ என்றது பரதன் சேனையை. படைகளை எலியாகவும், தன்னைப் பாம்பாகவும் உருவகித்தது எலிக்கு நாகம் பகை என்பதுபற்றி. “ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை, நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள் 763) என்பதனை ஈண்டு ஒப்பு நோக்குக. “அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு, விரவும் நன்மை என்”, “புற்றில் நின்று வல் அரவினம் புறப்படப் பொருமி, இற்றது எம்வலி என விரைந்து இரிதரும் எலி” (6238, 9325) எனக் கம்பர் பின்னும் கூறுவர். “பைரிவி நாகத் தைவாய்ப் பிறந்த, ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல, ஒழிந்தோர் ஒழிய” என (பெருங். 1.56: 273 - 5) வருவதும் இக்கருத்தினதாதல் அறிக. நகத்துக்கு வளமாவது கூர்மையாம். வாளுடைய வீரரைக் கூரிய நகம் உடைய புலியாக்கினார் என்க. உருவகம், உவமையாம். ‘வலிமை நிரம்பிய உலகம் என்றது உலகில் உள்ள ஆற்றலை நோக்கி. இனி ‘வளி உலாம் உலகு’ என்பாரும் உளர். அது பொருந்துமேற்கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. 10 |