2317.‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து
     இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு
     விலங்கிடும் வில்லாளோ?
‘‘‘தோழமை” என்று, அவர்
     சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று
     எனை ஏசாரோ?

     ‘இவர் -; ஆழம் - ஆழத்தையும்;  நெடுந் திரை - நீண்ட பெரிய
அலைகளையும்  உடைய; ஆறு - கங்கையாற்றை;  கடந்து - தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்);  வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு - பார்த்து (பயந்து);  விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற;  வில் ஆளோ - வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று-
(உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ -
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் -
அற்பனாகிய இந்த வேடன்;  இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது  சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ - என்றிவ்வாறு  உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா - (பழிப்பர்)(தொடரும்)

     ‘போவாரோ’, ‘ஏசாரோ’ என்பனவற்றுள் எதிர்மறை இறுதியில்
ஓகாரங்கள் ஐயவினாப் பொருளில் வந்துள்ளன. இனி இரண்டு எதிர்மறை
உடன் பாட்டுப் பொருள் என்ற கருத்தில் ‘ஆ’ ‘ஓ’ என்ற இரண்டையும்
எதிர்மறை எனக் கொண்டு கூறலும் ஒன்று. இவ்வாறே முன்னுள்ளவற்றிற்கும்,
பின்வருவனவற்றிற்கும் காண்க. “ தோழமை என்று அவர் சொல்லிய
சொல்லைக்’ குகன் ‘செய்குவென் அடிமை’ (1969) என்றபொழுது அவன்கூறிய
கொள்கை (தொண்டன்) கேட்ட அண்ணல், அதனை விலக்கி “யாதினும்
இனிய நண்ப” (1970) என்றும், “என் உயிர் அனையார் நீ, இளவல் உன்
இளையான், இந் நன்றுதலவள் நின்கேள்” (1988) என்றும், “முன்பு உளெம்
ஒரு நால்வேம்.....இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்றும் (1988)
இராமன் கூறிவற்றைக் கொண்டு அறிக. “ ஏழை ஏதலன் கீழ்மகன்
என்னாது.....தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று
இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம். ‘தோழமை’ என்றது பண்பாகு
பெயராய்த் தோழன் என்பதைக் குறித்தது. காட்டிலே வாழும் வேடுவராகிய
தமக்கு “வேழ நெடும்படை” ஒரு பொருட்டல்ல என்பது கருதி அதனைக்
கூறினான். “யானை உடைய படை காண்டல் முன்னினிதே” (இனியவை 5)
என்பதும் காண்க. ‘ஏழைமை’ என்பது அறியாமைப் பொருளதாயினும் ஈண்டு
எளிமை, அற்பம் என இகழ்பொருளில் வந்தது.                      15