2318.“முன்னவன்” என்று நினைந்திலன்;
     ‘மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்” என்றிலன்;
     அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
     இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில்,
     வேடர் விடும் சரம் வாயாவோ?

     ‘இவன் - இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் -
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
“மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்”
- வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக
உடன் உள்ளான்;  என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை
பேசானேல்
-அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி
நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் - (இடையே கங்கைக்
கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என
கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால்
போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;
வேடர் விடும் சரம் - வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில்
- அரசர்கள் மார்பில்;  வாயாவோ’ -தைத்து  உள் நுழைய
மாட்டாவோ?

     இராமனைத் தமையன் என்று கருதியிருந்தால் அரசை அவன்பால்
கொடுத்திருப்பான், புலி அன்னஇலக்குவன் இராமன் உடன் உள்ளான்
என்று கருதினால் போருக்கு வராமல் இருந்திருப்பான் என்றான்.என்
ஆற்றலையும் உணராதவனாய் உள்ளானே என்று இகழ்ந்தானாம் - இறுதியடி
இகழ்ச்சிக்குறிப்பாகப் பேசிய வீரவசனம். ‘அன்னவை பேசானேல்’ பேசுதல்
எண்ணுதல் என்ற பொருளில்வந்துள்ளது. எண்ணுதலைப் பேசுதல் என்றது
உபசார வழக்குஆகும்.                                         16