2319.‘பாவமும் நின்ற பெரும் பழியும்,
     பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண்
     உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர்
     உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும ஆர் உயிரும்
     கொடு போய் அன்றோ?

     மண் உலகு ஆள்பவர் - (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது  அதனால் விளையும்)
பாவத்தையும்;  நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் - விளையும்குற்றங்களையும்;
என்பவை - என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக - அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது
- எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ - தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

     இங்கே அண்ணனைக்கொல்வதால் ஏற்படும் பழி, பாவம்
முதலியவற்றைக் கருதுகின்றானில்லை என்னும் கருத்தால் இவ்வாறு
கூறினான். பகை நண்பு என்பன போர்க்குச் செல்கிறவர் தம் எதிரிகளுக்குத்
தற்போது பகைவர் யார்? நண்பர் யார்? என்பதை அறிந்து சேறல்
வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு நண்பன் குகன் என
அறிந்து சேறல் வேண்டும் என்பது. அவ்வாறு அறியின் இராமனுக்கு
நண்பன் குகன் என அறிந்து படையெடுத்துச் செல்வதைத் தவிர்ப்பான்
பரதன் என்றானாம். “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்” (குறள் 471) என்பதனுள் ‘துணைவலி’
என்றதனை இதன்கண் வைத்து அறிக. “செல்வம் வந்துற்ற காலைத்
தெய்வமும் சிறிது பேணார், சொல்வன நினைந்து சொல்லார் சுற்றமும்
துணையும் விளைவும் எண்ணார் மண்ணின் மேல் வாழும் மாந்தர்” (வில்லி
பாரதம்27. 141) என்னும் பாடற் கருத்தைக் குகண் கூற்றோடு ஒப்புக்
காணலாம். ஏவம் - எவ்வம் என்பதன் திரிபு. குற்றம் அல்லது தீமை எனப்
பொருள்படும். “ஏவம் பாராய்” (1532)என்பது காண்க......‘ஆ அது போக’ -
அந்த அது  போகட்டும் ‘மேலே சொல்லியவைகளைஇவன் சிந்திக்காமல்
விட்டாலும் விடட்டும்’ என்றானாம் குகன். நான் இவனையும்
சேனையையும் உயிரோடு போகவிட்டால்தானே இராமன் இருக்கும் 
இடம்வரை சென்று இவன் போர்செய் இயலும் என்றுகூறினான். ஓகாரங்கள்
வினாப் பொருளன.                                          17