2324. | ‘ “ஆடு கொடிப் படை சாடி, அறத்தவரே ஆள வேடு கொடுத்தது, பார்” எனும் இப் புகழ் மேவீரோ? நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர், நாம் ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி, எடுத்தது காணீரோ? |
ஆடு - அசையும்; கொடி - கொடிகளை உடைய; படை - சேனைகளை; சாடி - கொன்றழித்து; அறத்தவர் ஆள - தருமத்தின் துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார் கொடுத்தது - (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்; எனும் இப்புகழ் மேவீர் - என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்; நாடு கொடுத்த என் நாயகனுக்கு - (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு; இவர் - இந்தப்பரதர்; நாம் ஆளும் காடு - நாம் ஆட்சி செயும் நமக்கு உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி - ஆட்சி செய்ய மனம் பொறாதவராய; எடுத்தது- படை எடுத்து வந்த படியை; காணீர் - காணுங்கள். போர் வீரர்களைநோக்கி இதனுள் உள்ள நியாய அநியாயங்களை அவர்களுக்கு விளக்கி,அவரவரது மனோநிலைக்கு ஏற்பத் தூண்டிப் போர்க்கு அவர்களைத் தயார் செய்வது அறிந்துஇன்புறத்தக்கது. போர் என்றால் தினவும் தோள்களை உடையவர்களைப் பார்த்து, “ஆடு கொடிப் படைசாடி” என்றான். அறத்தின் பொருட்டுத் தம்முயிரையும் கொடுக்கும் மனம் உடைய வீரர்களைநோக்கி, “அறத்தவரே ஆள” என்றான். புகழ் ஆசை உடையாரைப் பார்த்து, “வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீர்” என்றான். தம்முடைமையைப் பறிப்பாரைப் பொறாத குணம் உடைய வீரரைப் பார்த்து நாம ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி” என்றான். இவ்வாறு பல்வேறு மனநிலையை வீரர்களையும் அவரவர்க்கு ஏற்பப் பேசிப் போர்க்குத் தயார் செய்வதாகக் குகனைப்பேச வைத்தகம்பர் கவி இனிமை தேரும்தொறும் இனிதாம் தமிழ்க்கு எடுத்துக் காட்டாகும். ‘ஏ’தேற்றம். ஓகாரம் வினாப் பொருட்டு. 22 |