2326. | என்பன சொல்லி, இரும்பு அன மேனியர் ஏனோர்முன், வன் பணை வில்லினன், மல் உயர் தோளினன், வாள் வீரற்கு அன்பனும், நின்றனன்; நின்றது கண்டு, அரிஏறு அன்ன முன்பனில் வந்து, மொழிந்தனன். மூரிய தேர் வல்லான்; |
வன் பனை வில்லினன் - வலிய கட்டமைந்த பருத்த வில்லை உடையவனும்; மல்உயர் தோளினன் - மல் தொழிலால் சிறப்புற்ற தோளை உடையவனும்; வாள் வீரற்குஅன்பனும் - வாளாற் சிறந்த வீரனாகிய இராமனுக்கு அன்பு பூண்டவனும் ஆய குகன்; இரும்பு அனமேனியர் ஏனோர்முன் - இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி - என்ற இச் சொற்களைச் சொல்லி; நின்றனன் -; நின்றது கண்டு - (குகன்) நின்ற படியைப் பார்த்து; மூரிய தேர்வல்லான் - வலிய தேரைஓட்டுதலில் வல்லவனாகிய சுமந்திரன்; அரி ஏறு அன்ன முன்பனில் - ஆண் சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து மொழிந்தனன் - வந்து சிலசொற்களைக் கூறுவானானான். இதன்முன் பத்துப் பாடல்களால் குகன் தன் படைவீரர்களை நோக்கிக் கூறிய வீரவாசகங்களைக் கூறி, அவற்றை “என்பன சொல்லி” என இச்செய்யுளில் வாங்கினார். மேற்செயல்கருதி நின்றான் ஆதலின், ‘நின்றனன்’ எனப் பெற்றது. இனிப் பரதனது உண்மை நிலையைத்தெரிவது கருதிப்போர்க்கு விரையாது நின்றான் எனலும் ஆம். மூரிய - தொன்மையான எனலும்ஆம். சுமந்திரன் சூரியகுலத்து அரசர்க்குத் தொன்றுதொட்டுத் தேர்வல்லான் ஆதலின்,அப்பொருளும் பொருந்தும், குகன் கூறிய அனைத்தும் பரதனை அழிப்பதாகக் கூறினவும் இராமன்பாற் கொண்ட பேரன்பாற் கூறியனவேயன்றி வேறன்று என்பதனை உணர்த்துதற்காக, ‘வாள் வீரற்குஅன்பனும்’ என்று பாடலில் குகனைக் கம்பர் குறிப்பிட்டார் என்னலாம். 24 |