பரதன் நிலை கண்டு, குகன் திடுக்கிடுதல்  

2330.என்று எழுந்த தம்பியொடும்,
     எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
     குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
     நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
     துண்ணென்றான்.

     (பரதன்) என்று - இவ்வாறு சொல்லி;  எழுந்த தம்பியொடும் -
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்;  எழுகின்ற காதலொடும் -
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -
ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி-
குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய
குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான்.

     பரதனைத்பற்றித் தான் எண்ணியதற்கும், அவன் நிலைக்கும் மிகவும்
மாறுபாடாக இருந்தது கண்டு துணுக்குற்றான் என்க. இராம இலக்குவர்
போலே பரத சத்துருக்கணர் ஆதலின், ‘எழுந்த தம்பி’என்று பரதன்
கட்டளை இட வேண்டாது அவன் குறிப்புணர்ந்து சத்துருக்கனன்
புறப்பட்டான்.                                                 28