2331. | வற்கலையின் உடையானை, மாசு அடைந்த மெய்யானை, நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை, கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்; வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். |
வற்கலையின் உடையானை - மரவுரியாலாகிய ஆடையை உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை - புழுதி படிந்த உடம்பை உடைய; நற் கலை இல் மதி என்ன - நல்லகலைகளில்லாத (ஒளியற்ற) சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை - ஒளி இழந்தமுகத்தை உடைய; பரதனை; கண்ணுற்றான் - (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து; கையினின்று வில்இடை வீழ - தன் கையிலிருந்து வில்லானது தானே சோர்ந்து நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று - துன்பத்தால் கலக்கமுற்று; நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான். பரதன் திருமேனி நிலை எவ்வாறு இருந்தது என்பதை இச் செய்யுள் விவரிக்கிறது. பரதனது நிலை இராமன் வனத்தின்கண் சென்றதனால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தைக் காட்டுவதாக இருந்ததுஆதலின், இப்படிப்பட்டவனை எப்படி நினைத்துவிட்டோம் என்ற தன்னிரக்கமும் சேர்ந்து கையறுநிலையைக் குகனுக்கு உண்டாக்கியது ஆதலின் நின்றவன் நின்றவாறே உள்ளான் என்ற வாறாம்.மதிக்குக் கலையால் ஒளி கூடுதலின் ஒளி குறைந்த முகத்தைக் கலை இழந்த மதியோடு உவமித்தார். எப்பொழுதும் தன்னிடத்திருந்து நீங்காது உறுதியாகப் பிடித்திருக்கும் வில்லும் தன்னை மறந்ததுயரநிலையில் குகன் கையிலிருந்து நழுவிக் கீழே தானே விழுந்தது என்பது குகனது நிலையைத்தெளிவாகக் காட்டும். அதனாலேயே. ‘நின்றான்’ என்னாது ‘நன்ளொழிந்தான் என்றார்; ஒரு சொல்லாக்குக. 29 |