குகனும் பரதனும் ஒருவரை ஒருவர் வணங்கித் தழுவுதல்  

2334.வந்து எதிரே தொழுதானை
     வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும்,
     அவன்த அடிவீழ்ந்தான்.
தந்தையினும் களிகூரத் தழுவினான் -
     தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிறுக்கும்
     சீர்த்தியான்.

     வந்து - (கங்கையின் வடகரைக்கு) வந்து;  எதிரே தொழுதானை -
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் - (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் -
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் -
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்;  (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்
-
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர - பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் -
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

     குகனும் பரதனும் மிகச் சிறந்த பாகவத உத்தமர்கள்; இராமன்பால்
ஆழங்காற்பட்ட அன்பினைஉடையவர்கள்; ஒருவரை ஒருவர் தம்மிற்
பெரியராக நினைப்பவர்கள். இப்பண்பு நலன்களை உடையஇருவர்
சந்திப்பில் அளவு கடந்த அன்பின் பெருக்கால் நிகழும் நிகழ்ச்சிகளே
இப்பாடலில்வருகின்றன. இப்பாடலில் வணங்கினான், அடிவீழ்ந்தான்,
தழுவினான் என்று மூன்று  நிகழ்ச்சிகள்முக்கிய இடம் பெறுகின்றன.
முன்னைய பாடலில் படகில் தனியே வந்தான்’ எனக் குகன் வந்ததாக
முடித்திருப்பதும்,  குகனே பரதனைத் ‘திசை நோக்கித் தொழுகின்றானாகக்’
கண்டு கூறுவதும்இப்பாடற் பொருளைத் தெளிவு செய்கின்றன. எதிரே
தொழுதானை என்பது  பரதனை எனவும்,வணங்கினான் குகன் எனவும்
ஆகிறது. வணங்குதலாகிய குகன் செயலை அடுத்து  நிகழ்வது  பரதன்
செயலாகும் அன்றோ. ‘மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும்
அவனும்’ என்பது பரதனைக் குறித்தது.அப்பரதன் அவன் (குகன்) அடியில்
வீழ்ந்தான் என ஆற்றொழுக்காக முடிந்தது.  பரதன் ‘மன் முன்னேதழீஇக்
கொண்ட மனக் கினிய துணைவன்’ எனக் குகனைக் குறித்து ‘என் முன்னே’
என்று தனக்குத்தமையனாகவும் கொண்டான்; அதுவும் அன்றி,
‘இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும்  மூத்தான்’(2367) என்று பின்னால்
தாயருக்கும் அவ்வாறே அறிமுகம் செய்விக்கிறான். ஆகவே, அண்ணன்
காலில் தம்பி விழுவதே முறை எனக் கருதி அடி வீழ்ந்தான் பரதன் என்க.
தன்னடியில் வீழ்ந்தபரதனைக் குகன் குகனைத் ‘தகவுடையோர் சிந்தையினும்
சென்னியினும் வீற்றிருக்கும்சீர்த்தியான்’ என்று கம்பர் கூறுவது
சிந்திக்கத்தக்கது. பிறப்பால் வேடனாகிய குகன் தன்னடிவீழும் பரதனைத்
தந்தைநிலையில் இருந்து தழுவினான் என்பதை ஏற்புடைத் தாக்கவே
சிறப்பால்மேலானோர் மனத்திலும், தலையிலும் ஏற்றிப் போற்றும்
குணங்களால் உயர்ந்த புகழ் உடையவன்என்று குகனை நமக்குக் காட்டினார்
கம்பர். இனி, இதனையும் பரதன் மேற்றாகவே கொண்டு கூறுவாரும் உளர்.
அது ஏற்புடைத்தாகுமேல் அறிந்து கொள்க.                         32